மருத்துவர் கிறீனும் மருத்துவக் கலைச்சொற்களும் | யாழ்ப்பாண மருத்துவ வரலாறு | பாலசுப்ரமணியம் துவாரகன்
Description
கிறீன் 1848 இல் மானிப்பாயில் மருத்துவக் கல்லூரியை ஆரம்பித்து மருத்துவர்களைப் பயிற்றுவித்தார். இதனால் யாழ்ப்பாணம் மேலைத்தேச மருத்துவத்தின் பயனை அனுபவித்தது. கிறீன் 1852இல் கல்வின் கற்றர் எழுதிய அங்காதிபாதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை யாழ்ப்பாணத்தில் வெளியிட்டார்.
தமிழ்மொழி மூலம் ஆங்கிலமருத்துவத்தைக் கற்பிப்பதற்கு பாடத்திட்டத்தில் உள்ள அனைத்து நூல்களும் தமிழ்மொழியில் இருக்கவேண்டும் என்று கிறீன் கருதினார். கிறீன் தானே மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டதுடன் ஒரு சில நூல்களை மொழிபெயர்க்கும் பணியைத் தனது நம்பிக்கைக்குரிய மாணவர்களிடம் ஒப்படைத்தார்.
தமிழில் மருத்துவம் கற்பிக்க வேண்டும் என்ற சிந்தனை கிறீனுக்கு ஏற்பட்டபோது தமிழிற் கலைச்சொற்களை (துறை சார்ந்த சிறப்புச் சொல்) உருவாக்குவது அவசியம் என்று கருதி புதிய சொற்களை உருவாக்கும் முயற்சியில் கிறீன் ஈடுபட்டார். இதற்காக பின்வரும் விதிமுறைகளைக் கைக்கொண்டார்.
தமிழில் வழக்கத்திலிருந்த சொற்களுள் மிகப்பொருத்தமானதையும் சுருக்கமானதையும் தேர்ந்தெடுத்தார். உதாரணம்: Hepatic Disorder - ஈரற் பிசகு, Histology - திசுவறி விளக்கம், இ(கி)ஸ்தாலுகம்)
அடுத்துத் தமிழ்ச் சொற்களிலிருந்து பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்து சிறுமாற்றங்களுடன் கலைச்சொல் உருவாக்கினார். ஒரே பொருளைக் குறிக்கும் பல சொற்கள் இருப்பின் அவைகளில் ஒன்றைத் தெரிவு செய்தார். உதாரணமாக Diagnosis என்பதற்கு நோய்நிதானம், ரோகஞம் ஆகிய சொற்கள் மருத்துவர் கிறீனால் பயன்படுத்தப்பட்டன. இங்கு ரோக என்ற சம்ஸ்கிருதச் சொல்லே தமிழில் ரோகம், உரோகம் என்று வழங்கப்படுகிறது. அதேபோல் நிதான என்ற சம்ஸ்கிருதச் சொல்லே தமிழில் நிதானம் என்று வழங்கப்படுகிறது.
தமிழிலிருந்து தேவையான சொல் கிடைக்காதபோது கிறீன் ஆங்கில உச்சரிப்பையும் ஒலியையும் பேணி ஆங்கிலத்திலிருந்து முதனிலையைத் தெரிவு செய்து தமிழ் மரபிற்கு ஏற்றவாறு விகுதியை அமைத்தார்.
சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் வழங்கிய தமிழ் வசனநடைக்கும் சொற்பிரயோகங்களுக்கும் 21 ஆம் நூற்றாண்டில் வேறுபாடுகள் நிறைய உண்டு. 19 ஆம் நூற்றாண்டில் மருத்துவர் கிறீன் உருவாக்கிய கலைச்சொற்களில் பெரும்பாலானவற்றை இன்றைய நிலையில் பயன்படுத்துவதில் பல இடர்பாடுகள் உண்டு.